தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்; மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் உள்பட 3 பேர் கைது

தொழில் அதிபரிடம் செல்போன் மூலம் பணம் கேட்டு மிரட்டிய மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-12 22:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி உழவர்கரை பஜனை மடம் தெருவை சேர்ந்தவர் செல்வநாதன் (வயது 35). தொழில் அதிபரான இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரது உறவினர் ஏழுமலை குடும்பத்துடன் பிரான்சில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஏழுமலையிடம், செல்வநாதன் ரூ.35 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி தருமாறு ஏழுமலை கேட்டார். ஆனால் செல்வநாதன் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதையடுத்து ஏழுமலை தனது உறவினரான லூர்துராஜ் என்பவரிடம் செல்வநாதனிடம் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி வாங்கித்தருமாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில் காலாப்பட்டு சிறையில் உள்ள பிரபல ரவுடி மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகளான பிரேம், பிரகாஷ், விக்னேஷ் ஆகியோர் செல்வநாதனின் செல்போனில் தொடர்பு கொண்டு ஏழுமலைக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் செல்வநாதன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லூர்துராஜ், பிரேம், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்