நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் பத்மநாபபுரம் வந்தன பக்தர்கள் போராட்டத்தால் பரபரப்பு

நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் சென்ற சாமி சிலைகள் பத்மநாபபுரம் வந்தன.பக்தர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-12 23:00 GMT
பத்மநாபபுரம்,

திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் கடந்த மாதம் 26-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றன.

சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோட்டையில் உள்ள நவராத்திரி மண்டபத்திலும், முருகன் ஆரியசாலை சிவன் கோவிலிலும், முன்னுதித்தநங்கை அம்மன் செந்திட்டை பகவதி அம்மன் கோவிலிலும் வைத்து நவராத்திரியையொட்டி 9 நாட்கள் பூஜை நடந்தது. நவராத்திரி விழா நிறைவடைந்ததை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 10-ந்தேதி யானை மற்றும் பல்லக்கில் புறப்பட்ட சாமி சிலைகள் நேற்று மாலை பத்மநாபபுரம் வந்தடைந்தன.

வரவேற்பு

அப்போது சாமி சிலைகளுக்கு அரண்மனை நுழைவாயிலில் செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் அரண்மணையில் உள்ள குளத்தில் சரஸ்வதி அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு பூஜையில் அமர்த்தப்பட்டது. உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் அனந்த பத்மநாபசாமி முன்பு வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் சிலை குமாரகோவிலுக்கு சென்றடைந்தது. முன்னுதித்தநங்கை அம்மன் சிலை கல்குளம் மகாதேவர் கோவிலில் இறக்கி பூஜை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் அரண்மனை சூப்பிரண்டு அஜித்குமார், குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையர் அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திடீர் போராட்டம்

முன்னதாக வேளிமலை முருகன் வெள்ளிக்குதிரை வாகனத்தை பக்தர்கள் தக்கலை பஸ் நிலையம் அருகே சுமந்து வந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று பக்தர்கள் வெள்ளிக்குதிரை வாகனத்தை சுமந்து வந்த பகுதியில் நுழைந்து இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் காரை தடுத்து நிறுத்தினர். ஆனால் கார் ஓட்டி வந்த நபர் பக்தர்களை கடந்து செல்ல முயன்றார். இதனால், பக்தர்களுக்கும் காரில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து வெள்ளிக்குதிரை வாகனத்தை சுமந்து வந்த பக்தர்கள் திடீரென வாகனத்தை தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தக்கலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காரை ஓட்டி வந்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரை காருடன் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு வெள்ளிக்குதிரை வாகனத்தை சுமந்து சென்றனர்.

முன்னுதித்தநங்கை அம்மன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுசீந்திரத்தை வந்தடைகிறது.

மேலும் செய்திகள்