உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-13 22:45 GMT
போடிப்பட்டி,

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அதிக அளவில் ரெயில் போக்குவரத்தை நம்பியிருக்கின்றனர். குறைந்த கட்டணம், அலுப்பில்லா பயணம் போன்ற பல்வேறு காரணங்களால் தற்பொழுது பலருடைய தேர்வும் ரெயில் பயணமாகவே உள்ளது.

மேலும் திருச்செந்தூர் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாக உள்ளது. இதனால் பாலக்காடு திருச்செந்தூர் ரெயில் எல்லா நாட்களிலும் நிரம்பி வழியும் நிலையிலேயே உள்ளது. இந்தநிலையில் அடிக்கடி இந்த ரெயில் திருச்செந்தூர் வரை இயக்கப்படாமல் பாதி வழி வரையே இயக்கப்படுகிறது. இதனால் பண்டிகைக்காலம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது ரெயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது “பொள்ளாச்சி, உடுமலை, பழனி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த ரெயில் பெரும்பாலான நாட்களில் திருச்செந்தூர் வரை இயக்கப்படவில்லை. ரெயில் வழித்தடங்களில் மேம்பாட்டுப்பணிகள் நடப்பதால் பல நாட்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தென்மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி தீபாவளிக்கு முன் திருச்செந்தூர் வரை இயக்க ரெயில் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவையில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்” என்றனர்.

மேலும் செய்திகள்