ஆரணி அருகே, அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

ஆரணி அருகே அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-10-13 22:30 GMT
ஆரணி, 

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சி ஏ.சி.எஸ். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 34). இவர் சேவூர் - அடையபுலம் சாலையில் அரிசி ஆலை வைத்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் புரட்டாசி 4-வது சனிக்கிழமை சாமி கும்பிடுவதற்காக ஆரணி மகாவீர் தெருவில் உள்ள தனது தாய்வீட்டிற்கு வீட்டை பூட்டிவிட்டு அருண்குமார் குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும் பீரோக்கள் திறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகா‌‌ஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு (கைரேகை பிரிவு) சுந்தரேசன் தலைமையில் போலீசார் அங்கு பதிந்திருந்த தடயங்கள், கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அருண்குமார் போலீசில் கொடுத்த புகாரில் தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 80 பவுன் நகையும், ரூ. 5 லட்சமும் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை போன வீட்டின் அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் சென்று கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா?, சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது வந்தார்களா? என விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்