டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1½ லட்சம் வழிப்பறி

டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளரை தாக்கி ரூ.1½ லட்சத்தை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-10-13 22:45 GMT
வாணாபுரம், 

வாணாபுரம் அருகே சின்னகல்லபாடியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நம்மியந்தல் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 48) என்பவர் மேற்பார்வையாளராகவும், கீழ்அணைக்கரையை சேர்ந்த செல்வராஜ் (34) என்பவர் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

வழக்கம் போல் நேற்றுமுன்தினம் பகல் 12 மணி அளவில் டாஸ்மாக் கடையை திறந்து விற்பனையில் இருவரும் ஈடுபட்டனர். விற்பனை முடிந்து இரவு 10 மணியளவில் விற்பனையான ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை ஒரு பையில் எடுத்து கொண்டு கடையை மூடிவிட்டு புறப்பட்டனர்.

முத்துக்குமார் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கடையை விட்டு வெளியே வரும்போது மர்ம நபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி பின்தொடர்ந்து வந்து உள்ளனர்.

அப்போது மர்ம நபர்களில் ஒருவர் முத்துக்குமாரை கத்தியால் வெட்டி அவரது கையில் இருந்து பணப்பையை பறித்ததாக தெரிகிறது. இதனையடுத்து அருகில் இருந்த செல்வராஜ் முத்துக்குமாரை காப்பாற்றுவதற்காக ஓடிவந்தார். அப்போது மற்றவர்கள் செல்வராஜை கல்லால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து மர்மநபர்கள் 3 பேரும் முத்துக்குமார் பையில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் படுகாயம் அடைந்த இருவரையும் போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.இந்த சம்பவம் குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்