சோழவந்தான் அருகே கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

சோழவந்தான் அருகே பழமையான கோவிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-10-13 23:15 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வி.கோவில்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த மருதோய ஈஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 8-ந் தேதி ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 65 கிலோ எடையுள்ள சிவன், சிவனேசவல்லி (பார்வதி) ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டு, பிரதிஷ்டை விழா நடந்தது. பின்னர் அந்த சிலைகள் மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அர்ச்சகர் தீபம் ஏற்றுவதற்காக கோவிலுக்கு சென்றார். அங்கு கோவிலை திறந்து பார்த்தபோது மூலவர் சன்னதியில் இருந்த சிவன், சிவனேசவல்லி ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு இருந்தது. திருவாச்சி மட்டும் சேதம் அடைந்த நிலையில் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கோவில் கமிட்டி தலைவருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் கோவிலுக்கு வந்த நிர்வாகிகள் சிலைகள் காணாமல் போனது குறித்து விசாரித்தனர். இது தொடர்பாக அவர்கள் உடனடியாக விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஐம்பொன் சிலை திருட்டு போன கோவிலில் ஆய்வு செய்தனர்.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் ஐம்பொன் சிலைகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்