காரிமங்கலம் ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு

காரிமங்கலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-10-13 23:00 GMT
காரிமங்கலம்,

காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பூமாண்டஅள்ளி ஏரி, மோதூர் ஏரி, மேக்கனாம்பட்டி ஏரி, பொம்மஅள்ளி ஏரி, முக்குளம், மொரசுப்பட்டி ஏரி, கும்பாரஅள்ளி உள்ளிட்ட 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மலர்விழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு துறையின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 20018-19-ம் ஆண்டில் 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.3.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

விரைந்து முடிக்க வேண்டும்

அதன்படி காரிமங்கலம் ஒன்றியத்தில் 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்கும் முன்பு இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வடிவேலன், உதவி செயற்பொறியாளர் அன்பழகன் மற்றும் ஊராட்சி செயலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்