ஓடும் ரெயிலில் செல்போனை பறித்து விட்டு முதியவரை ஆற்றில் தள்ளிய மர்ம நபர் நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவிலில் ஓடும் ரெயிலில் செல்போனை பறித்துவிட்டு முதியவரை ஆற்றில் தள்ளிவிட்ட மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.

Update: 2019-10-14 22:00 GMT
நாகர்கோவில்,

சென்னையை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 65). இவருடைய உறவினர் வீடு திங்கள்சந்தையில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன்குமார் திங்கள்சந்தை வருவதற்காக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் ரெயிலில் பயணம் செய்தார். இந்த ரெயில் மதியம் 2 மணி அளவில் நாகர்கோவில் அருகே மெதுவாக வந்து கொண்டு இருந்தது. அப்போது மோகன்குமார் ரெயில் கதவு அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் திடீரென அங்கு வந்து மோகன்குமாரிடம் செல்போனை தருமாறு மிரட்டி உள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். எனினும் செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் ேமாகன்குமாரிடம் இருந்து செல்போனை வலுக்கட்டாயமாக பறித்தார்.

ரெயிலில் இருந்து தள்ளிவிட்டார்...

பின்னர் ஓடும் ரெயிலில் இருந்து மோகன்குமாரை அந்த மர்ம நபர் கீழே தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத அவர் பழையாற்று கால்வாயில் விழுந்தார். ரெயில் மெதுவாக சென்றதாலும், பழையாற்று கால்வாயில் குறைவாக தண்ணீர் சென்றதாலும் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதைத் தொடர்ந்து காயங்களுடனும், சகதியுடனும் அவர் நாகர்கோவில் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் தன் உறவினர்களை வரவழைத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் மோகன்குமாரை ரெயிலில் இருந்து தள்ளிவிட்ட மர்ம நபர் யார்? என்று ெதரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

பயணிகள் அச்சம்

ஓடும் ரெயிலில் இருந்து மோகன்குமாரிடம் செல்போனை பறித்துவிட்டு ஆற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரெயில் பயணிகள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ரெயிலில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்