பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் கணவர் குடும்பத்தினருடன் பெண் தர்ணா

பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவர் குடும்பத்தினருடன் சேர்ந்து பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-14 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முஜிப்ரஹ்மான் தலைமையில், அக்கட்சியினர் கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு அளித்தனர். அதில் எங்கள் கட்சியின் சார்பில் காந்தி பிறந்த நாளான கடந்த 2-ந் தேதி முதல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மது எதிர்ப்பு பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். தமிழக முதல்- அமைச்சர் பொறுப்பேற்றவுடன் படிப்படியாக மதுக்கடைகள் (டாஸ்மாக்) குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதனால் விதவைகள் உதவித்தொகை கேட்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே மாவட்டத்தில் விரைவாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை அரசிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

எல்.கே.ஜி.-யு.கே.ஜி. வகுப்புகள்

வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. ஆனால் அங்கு அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இல்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகள் வெளியூரில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். எனவே எங்கள் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தர்ணா போராட்டம்

இந்நிலையில் குன்னம் தாலுகா லப்பைக்குடிகாடு காயிதே மில்லத் நகரை சேர்ந்த லைலா என்கிற பெண் தனது கணவர் அபுதாகீர் மற்றும் கணவரின் 2 சகோதரர்களுடன் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு வந்தார். அப்போது அவர்கள் திடீரென்று அரங்கத்தின் நடுவே திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் லைலா குடும்பத்தினரை, அவரது மாமனார் மற்றும் நாத்தனார்கள் 2 பேர், ஒரு நாத்தனாரின் கணவர், உறவினர் ஒருவர் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வருகிறார்களாம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மங்களமேடு போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிடமும், போலீஸ் சூப்பிரண்டிடமும் பலமுறை மனு கொடுத்தும் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லைலா, தனது கணவர், கணவரின் 2 சகோதரர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் லைலா இது தொடர்பாக மனுவினை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்து விட்டு சென்றார்.

295 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 295 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்