வெள்ளகோவிலில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிதிநிறுவன அதிபர் -மனைவியின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை; அக்காள் உள்பட 2 பேர் கைது

வெள்ளகோவிலில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிதி நிறுவன அதிபர், அவருடைய மனைவி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக நிதி நிறுவன அதிபரின் அக்காள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-15 00:00 GMT
வெள்ளகோவில்,

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் மதுரை ஆரப்பாளையம் மேலபொன்னகரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி வசந்தா மணி (45). இவர்களுடைய மகன் பாஸ்கர் (27). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு செல்வராஜ் கொடுத்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் மற்றும் அவருடைய மனைவி வசந்தாமணி ஆகியோர் ஒரு காரில் செல்வராஜின் உடன் பிறந்த அக்காள் கண்ணம்மாளுக்கு (54) திருமண பத்திரிகை கொடுக்க திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தாண்டகுமாரவலசில் உள்ள அவருடைய வீ்ட்டிற்கு சென்றனர். அங்கு கண்ணம்மாளுக்கு திருமண பத்திரிகை கொடுத்ததும், தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்ட செல்வராஜ் மதுரைக்கு செல்வதாக தெரிவித்தார்.

அதன்பின்னர் 2 மணிநேரத்திற்கு பிறகு தனது தந்தையும், தாயும் மதுரை சென்று விட்டார்களா? என்பதை உறுதி செய்ய பாஸ்கர் தனது தந்தையின் செல்போனை தொடர்பு கொண்டார். அப்போது செல்வராஜின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனது தந்தையின் செல்போனுக்கு பாஸ்கர் பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் தனது தாய்-தந்தைக்கு என்ன ஆனதோ என்று அதிர்ச்சியடைந்த பாஸ்கர் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் செல்வராஜ் மற்றும் அவருடைய மனைவியும் கொலை செய்யப்பட்டு கண்ணம்மாளின் வீ்ட்டின் அருகே புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவர்கள் சென்ற கார் கரூர் அருகே சுக்காலியூரில் மீட்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜின் அக்காள் கண்ணம்மாள் மற்றும் கண்ணம்மாளின் மருமகன் சதீஷ் என்கிற நாகேந்திரன் (35) ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையில் கண்ணம்மாளின் வீ்ட்டின் அருகே புதைக்கப்பட்ட செல்வராஜ் மற்றும் வசந்தாமணி ஆகியோரின் உடல்களை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், தடய அறிவியல் நிபுணர் ஸ்ரீதரன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், கோவை அரசு மருத்துவமனை சட்டம் சார்ந்த மருத்துவர் ஜெயசிங், மருத்துவத்துறை பேராசிரியர் பேரானந்தம், காங்கேயம் தாசில்தார் புனிதவதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 1 மணிக்கு தம்பதி புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு தம்பதி புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டப்பட்டது.

சுமார் 3 அடி ஆழம் தோண்டியதும் போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு உடல் இருந்தது. இதையடுத்து அந்த உடலை வெளியே எடுத்து போர்வையை பிரித்து பார்த்தபோது அது வசந்தாமணி என்றும், அவருடைய கழுத்து அறுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த போர்வைக்குள் ஒரு கத்தியும், கட்டுக்கம்பியால் சுற்றப்பட்ட அதிக எடை கொண்ட பூட்டும் இருந்தது. மேலும் வசந்தாமணியின் உடல் உப்பி இருந்தது. வசந்தாமணியின் பின்னந்தலையில் தாக்கி, அதன்பின்னர் அவரை கழுத்தை அறுத்து கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வசந்தாமணியின் கழுத்து, காதில் எந்த நகையும் இல்லை. அவை கழற்றப்பட்டு இருந்தது.

அதற்கு கீழ் மற்றொரு போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் செல்வராஜ் உடல் இருந்தது. அதாவது செல்வராஜின்உடல் மல்லார்ந்து இருந்தது. செல்வராஜை இரும்பு பூட்டால் பின்னந்தலையில் தாக்கி, அவரை கொன்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொலை நடந்த இடத்தில் படிந்து இருந்த ரத்தக்கறை படிந்த சேலை ஒன்றும் அந்த குழிக்குள் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த சேலையை முக்கிய தடயமாக எடுத்து வைத்துள்ளனர். அதன்பின்னர் தம்பதியின் உடல்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை முடிந்ததும், இருவரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் சொந்தஊரான தாசநாயக்கனூருக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்