இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2019-10-14 22:15 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மருதானப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பழங்குடியின மற்றும் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மருதானப்பள்ளி, வானமங்கலம், மருவே, பஞ்சேஸ்வரம் கிராமங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். கடந்த 4 தலைமுறைகளாக சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், அரசின் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை தாலுகா வெண்ணாம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியை சேர்ந்த 60 குடும்பத்தினர் வெண்ணாம்பட்டி ஏரிக்கு செல்ல 62 அடி அகலம், 450 அடி நீள சாலையை கடந்த சில ஆண்டுகளாக பொது வழியாக பயன்படுத்தி வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் நிலத்தை வாங்கிய சிலர் அந்த வழிப்பாதையை ஆக்கிரமித்து முள் வேலி அமைத்து பொது வழியை அடைத்துள்ளனர்.

இது குறித்து அளித்த புகாரின் பேரில் 4 முறை தாசில்தார் வழிப்பாதையை அளந்து கல் நட்டு சென்றார். ஆனால் அவற்றை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றி விட்டனர்.

இது குறித்து கேட்டால், கொலை மிரட்டல் விடுவதோடு, சாதி பெயரைச் சொல்லி திட்டுகின்றனர். எனவே பொது வழியை அடைத்து, சாதி பெயரை சொல்லி திட்டியவர்கள் மீது வன்கொடுமை, நில அபகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்