ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிகோரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் 16-வது நாளாக போராட்டம்

ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி கோரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் 16-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-10-14 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கும் இடையே கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் விதிகளை மீறி மீன் பிடிப்பதாக நெல்லை மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

முற்றுகை

மேலும் நெல்லை மீனவர்கள் சின்னமுட்டம் துறைமுகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த குற்றச்சாட்டை கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் மறுத்ததுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த 29-ந்தேதி முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவ பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சேரன்மாதேவியில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நெல்லை மற்றும் குமரி மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி கோரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று 16-வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதனால் சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தன.

கண்டனம்

இதுதொடர்பாக கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் ரெஜீஸ் கூறியதாவது:-

நெல்லை மாவட்ட மீனவர்களின் குற்றச்சாட்டு ஏற்கமுடியாத ஒன்று. எங்கள் விசைப்படகு மீனவர்கள் சட்டப்படியே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு இருக்க சின்னமுட்டம் துறைமுகத்தை நெல்லை மீனவர்கள் முற்றுகையிட்டது கடும் கண்டனத்துக்குரியது. நாங்கள் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு சென்று விட்டு இரவு 8 மணிக்கு கரை திரும்பி வருகிறோம்.

அனுமதி

தற்போது நாங்கள் கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி கேட்டு வருகிறோம.் இது தொடர்பாக சேரன்மாதேவியில் நடந்த சமாதான கூட்டத்தில் எந்த முடிவும் எட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் எங்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மீன்வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்பின் 2 நாளில் எங்கள் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்