ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை; போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை

போலீஸ் விசாரணைக்கு பயந்து ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

Update: 2019-10-14 23:15 GMT
செங்குன்றம்,

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 23). இவர், அதிகாலையில் அதே பகுதியில் பால் பாக்கெட் போடும் வேலை செய்து வந்தார்.

அதே பகுதி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (28). இவர், அதே பகுதியில் அதிகாலையில் பேப்பர் போடும் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் வெங்கடேசனுக்கும், ரமேசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ரமேஷ் மீது மாதவரம் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன், ரமேசுக்கு போன் செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்ததாக தெரிகிறது.

இதனால் பயந்துபோன ரமேஷ், நேற்று மதியம் 2 மணி அளவில் பெரம்பூர் லோகோ அருகில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரமேஷ் சாவுக்கு வெங்கடேசன்தான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி ரமேசின் உறவினர்களும், அந்த பகுதி பொதுமக்களும் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு மாதவரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்