கலெக்டர் அலுவலகத்தில் புதுக்காடு கிராமத்தினர் குடிநீர் கேட்டு முற்றுகை

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் வசதி கேட்டு புதுக்காடு கிராமத்தினர் முற்றுகையிட்டனர்.

Update: 2019-10-14 23:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் கிடைக்கவில்லை. காவிரி குடிநீர் கேட்டு தொடர்ந்து மனு கொடுத்த நிலையில் 2 குழாய்களில் தண்ணீர் விட்டு புகைப்படம் எடுத்து சென்றனர். அதன்பின்னர் தண்ணீர் வரவில்லை. இதனால் குடிப்பதற்கு ரூ.10 கொடுத்தும், அன்றாட தேவைகளுக்கு ரூ.8 கொடுத்தும் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். உடனடியாக எங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் பெற்ற வியாபாரிகள் நலசங்கத்தினர், தாங்கள் முறையான உரிமம் பெற்று வரி செலுத்தி பட்டாசு விற்பனை செய்து வருகிறோம். ஆனால் ஏராளமானோர் உரிமம் இல்லாமல் தள்ளுவண்டி, கடைகளில் சீன பட்டாசுகளை பாதுகாப்பின்றி விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுகொடுத்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் வடக்கு பகுதி யாதவர் முதியோர் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பேராவூர் வடக்கு பகுதியில் 200 வீடுகள் உள்ளன. எங்களுக்கு தேவிபட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 75 ஆண்டுகளாக மயானம் இருந்து வந்தது. இந்த நிலையில் சாலை விரிவாக்கத்திற்காக மயானத்தில் பெரும்பகுதியை எடுத்துவிட்டனர்.

மீதம் உள்ள இடம் ஓடைபகுதியாக உள்ளதால் மயானத்திற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. எனவே, எங்களுக்கு மயானத்திற்காக மாற்று இடம் ஒதுக்கி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் புதுக்காடு பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்யவும், அனுமதியின்றி வைக்கப்படும் பட்டாசு கடைகளை உடனடியாக அகற்றவும், மயானத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்து வழங்கவும் உத்தரவிட்டார்.

நயினார்கோவில் அருகே உள்ள வாணியவல்லம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 60). இவர் தனது பேத்தி மகாஸ்ரீ (5) என்ற சிறுமியை அழைத்துக்கொண்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். சிறுமி பிறக்கும்போது 500 கிராம் மட்டுமே எடை இருந்த நிலையில், 2 கண்களும் தெரியாமல், 2 கால்களும் நடக்க முடியாத நிலையில் மாற்றுத்திறனாளியாக உள்ளார். உடல் வளர்ச்சி இன்றி மாற்றுத்திறனாளியாக உள்ள மகாஸ்ரீயை வளர்க்க சிரமப்படுவதாகவும், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்கி ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை எவ்வித உதவித்தொகையும் வழங்கவில்லை. இதுகுறித்து மாற்றுத்திறனாளி அலுவலத்தில் கேட்டபோது முன்னுரிமை வரிசைபடிதான் உதவித்தொகை வழங்க முடியும் என்று அலைக்கழிக்கின்றனர். எனது பேத்தியை வளர்த்து பராமரிக்க மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் உடனடியாக மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்