உசிலம்பட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கொடூரக் கொலை; கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

உசிலம்பட்டி அருகே தலையில் கல்லைப் போட்டு பிளஸ்-1 மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திருமணத்துக்கு மறுத்ததால் அவரை கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-10-14 23:15 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஓணாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் தற்போது மதுரை செல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பால்பாண்டி அந்த பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்பாண்டியின் சொந்த ஊரான ஓணாப்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக அவர் குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.

திருவிழா முடிந்ததும் பால்பாண்டி தன்னுைடய மகளான பிளஸ்-1 மாணவி சந்தியாவை(வயது 16) தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, பால்பாண்டியும், அவருடைய மனைவி கவிதாவும் மீண்டும் மதுரைக்கு வந்தனர்.

பாட்டி செல்லம்மாள் வீட்டில் இருந்த சந்தியா நேற்று முன்தினம் அங்குள்ள தோட்டத்தில் குளிப்பதற்காக தனியாக சென்றுள்ளார். ஆனால் இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

எனவே அவருடைய பாட்டியும், உறவினர்களும் சந்தியாவை தேடினர். பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தோட்டம் அருகில் உள்ள குன்று பகுதியில் தேடிய போது, அங்கு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சந்தியா பிணமாக கிடந்தார்.இதை பார்த்து அவருடைய பாட்டி செல்லம்மாளும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுதொடர்பாக சேடபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

சந்தியாவின் உடலை மீட்டு, பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே மாணவி கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பதை அறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். சம்பவ இடத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் ஓணாப்பட்டியை சேர்ந்த அம்மவாசி மகன் மாதவனை(24) சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

தீவிர விசாரணையில், மாணவி சந்தியாவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் மாதவனை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நான் மாணவி சந்தியாவை காதலித்தேன். திருமணம் செய்துகொள்ள அவளிடம் வற்புறுத்தினேன். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். இந்த நிலையில் தோட்டத்துக்கு தனியாக அவள் குளிக்கச் சென்றதை கவனித்து பின்தொடர்்ந்து சென்றேன். அங்கும் அவளிடம் பேசிப்பார்த்தேன். ஆனால் அவள் சம்மதிக்காததால் ஆத்திரம் அடைந்தேன். எனவே அவளை அருகில் உள்ள குன்று பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றேன்.

அவள் தன்னை விட்டு விடும்படி கெஞ்சினாள். அவளை உயிருடன் விட்டால் நடந்ததை வெளியே சொல்லிவிடுவாள் என்று, அங்கு கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டு சந்தியாவை கொலை செய்தேன்.

இ்வ்வாறு மாதவன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பிளஸ்-1 மாணவி தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்