மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசார இயக்கம் மன்னார்குடியில் நடந்தது

மன்னார்குடியில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.

Update: 2019-10-15 22:45 GMT
மன்னார்குடி,

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன்படி மன்னார்குடி நகரில் கீழப்பாலம், நகராட்சி அலுவலகம், பந்தலடி, பெரியார் சிலை உள்ளிட்ட இடங்களில் பிரசார இயக்கம் நடந்தது. பிரசார இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். பிரசார இயக்கத்தினை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் நிர்வாகிகள் பார்த்திபன், சந்திரா, சிவரஞ்சித், அகோரம், பக்கிரிசாமி, சிராஜிதீன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, இதனால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு, குறு தொழில்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை மூடல் போன்றவை நடைபெற்று வருகிறது.. மதரீதியாக மனிதர்களை பிளவுபடுத்தி சமூக சீரழிவை பா.ஜனதா அரசு ஏற்படுத்தி வருகிறது.

புதிய கல்வி கொள்கை

மத்திய அரசின் இத்தகைய மோசமான அரசியல், பொருளாதார நிலையை கண்டித்தும், விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்திட வேண்டும். 100 நாள் வேலையினை 200 நாளாக உயர்த்தி தினசரி ஊதியம் ரூ.400 வழங்கிட வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டு பயிர்காப்பீடு கிடைக்காத கிராமங்களுக்கு பயிர்காப்பீடு வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். ராணுவ தளவாட தொழிற்சாலை, ரெயில்வே போன்றவைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். வயதானவர்களுக்கும், விதவைகளுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி பிரசாரம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்