பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; அதிகாரிகளுக்கு, சப்-கலெக்டர் உத்தரவு

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டக்குடியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் பிரவின்குமார் உத்தரவிட்டார்.

Update: 2019-10-15 22:30 GMT
திட்டக்குடி,

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தாசில்தார் செந்தில்வேலன், துணை தாசில்தார்கள் ஜெயச்சந்திரன், எழில்வளவன், வட்ட வழங்கல் அலுவலர் ராமர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார் கலந்து கொண்டு பேசுகையில், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும், குறிப்பாக பட்டா மாற்றம் சிட்டா, அடங்கல் மற்றும் பல்வேறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்போருக்கு உடனடியாக அதனை கொடுத்தால், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் அதை வைத்துக்கொண்டு மற்ற பணிகளை செய்ய ஏதுவாக இருக்கும் என்றார்.

கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த சப்-கலெக்டர் பிரவின்குமார், அங்கு நின்றிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அங்கு காத்திருந்த கோவிந்தசாமி என்பவர், என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்று வரும் தனது மகளுக்கு கல்வி உதவித்தொகை பெறும் வகையில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார். உடனடியாக அவரது மனுவை ஏற்ற சப்-கலெக்டர், சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சப்-கலெக்டர் பிரவின்குமார், திட்டக்குடியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு சென்று, அங்கு உணவு முறையாக வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்