தஞ்சை மாவட்ட பகுதிகளில் மணல் கடத்தல்; 5 பேர் கைது

தஞ்சை மாவட்ட பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-15 22:15 GMT
ஒரத்தநாடு,

ஒரத்தநாடு-மன்னார்குடி சாலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் அந்த லாரியில் மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நம்புரான்பட்டியை சேர்ந்த மோகன் (வயது32) என்பவரை கைது செய்தனர். லாரியின் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதேபோல் தஞ்சை அருகே அருள்மொழிப்பேட்டை பவானியம்மாள்புரம் பகுதியில் அம்மாப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த சரக்கு வேனை போலீசார் வழிமறிக்க முயன்றனர். அப்போது அதன் டிரைவர் சரக்கு வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சரக்குவேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

3 மாட்டு வண்டிகள்

விசாரணையில் எருக்கம்பள்ளத்தை சேர்ந்த ராஜா(42) என்பவர் சரக்கு வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் எருக்கம்பள்ளத்தில் உள்ள வீட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ராஜாவை கைது செய்தனர். தஞ்சை அருகே உள்ள நல்லவன்னியன்குடிக்காடு பகுதியில் நேற்று அம்மாப்பேட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மாட்டு வண்டிகளில் வெண்ணாற்றில் இருந்து மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 3 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த கோவிலூர் வடக்குத்தெருவை சேர்ந்த ராபர்ட், ரவிச்சந்திரன், குணபதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் மணல் கடத்தி வந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்