வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கு: கைதான பெண் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு

வெள்ளகோவிலில் தம்பதியை கொலை செய்த வழக்கில் கைதான பெண் உள்பட 2 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2019-10-16 00:00 GMT
வெள்ளகோவில்,

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). மதுரை ஆரப்பாளையம் மேல பொன்னகரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி வசந்தாமணி (45). இவர்களின் மகன் பாஸ்கருக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக செல்வராஜூம், அவருடைய மனைவி வசந்தாமணியும் ஒரு காரில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தாண்டகுமாரவலசில் வசித்து வரும் செல்வராஜின் அக்காள் கண்ணம்மாள் வீ்ட்டிற்கு சென்றனர்.

அங்கு செல்வராஜூம், அவருடைய மனைவியும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இந்த கொலை தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணம்மாள் மற்றும் அவருடைய மருமகன் சதீஷ் என்கிற நாகேந்திரன் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கம்பி சுற்றப்பட்ட பூட்டு மற்றும் இதர ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகிறார் கள். இதற்கிடையில் கைதான 2 பேரையும் காங்கேயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பிரவின் குமார் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு அவர்களை, வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

தம்பதியை கண்ணம்மாளும், அவருடைய மருமகனும் மட்டும் கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்றும், மேலும் சிலருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். ஏனெனில் தம்பதியை கொன்று அவர்களுடைய உடலை குழி தோண்டி புதைப்பது என்பது ஒரு மணிநேரத்தில் இருவரால் முடியாது. எனவே இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்