ஆழியாறு ஊருக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு - வனத்துறையினர் விரட்டினர்

ஆழியாறு ஊருக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் யானையை விரட்டினர்.

Update: 2019-10-15 21:45 GMT
பொள்ளாச்சி,

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியாறு வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. கடந்த மே மாதம் நவமலையை சேர்ந்த பள்ளி மாணவி ரஞ்சனா, தொழிலாளி மகாளி ஆகியோரை இந்த யானை மிதித்து கொன்றது. அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் ஆழியாறு, அர்த்தநாரிபாளையம், பருத்தியூர், சேத்துமடை ஆகிய பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருகின்றது.

கடந்த 2 நாட்களுக்கு முன் சேத்துமடையில் தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதன் காரணமாக தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை வனவர் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு யானை வனத்துறை சோதனை சாவடிக்கு எதிரே உள்ள மூலிகை செடி பண்ணைக்குள் நுழைந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழியாறு அணை, புளியகண்டி ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் யானை வருவதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து புளியகண்டி பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை பூட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினர். மேலும் அணையில் பொதுப்பணித்துறை சோதனை சாவடிகளை திறந்து வைக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் அணைக்குள் இறங்கிய யானை, தண்ணீரில் நீந்தி ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வழியாக அணையின் மேல்பகுதிக்கு வந்தது.

வனத்துறையினரும் யானையை பின் தொடர்ந்து சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் விரட்டினர். ஆனால் யானை பொதுப்பணித்துறை கேட்டை சேதப்படுத்தி விட்டு, புளியகண்டி பகுதிக்கு வந்தது. அங்கு மாரியம்மாள் என்பவரது வீட்டை சேதப்படுத்தியது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் யானை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பிறகே ஆழியாறில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

யானை நடமாட்டத்தால் நவமலை பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தற்போது கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் ஒலிப்பெருக்கி மூலம் யானை நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்