கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டிய பொதுமக்கள்

அனந்தலையில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

Update: 2019-10-15 22:45 GMT
வாலாஜா,

வேலூர் மாவட்டம், வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள மலைகளில் கல்குவாரிகள் உள்ளன. இந்த நிலையில் மேலும் புதிதாக 12 கல்குவாரிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பல கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக 12 கல்குவாரிகள் அமைக்க புவியியல் மற்றும் கனிமவளத்துறை சார்பில் ஏலம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை தடுப்பதற்காக நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் புதிதாக கல்குவாரி ஏலம் நடத்தக்கூடாது என மனு கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மற்றும் உதவியாளர் வடிவேல் ஆகியோரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் பூட்டினர். மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா, வாலாஜா தாசில்தார் பாலாஜி, வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களை சமரசப்படுத்தினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை மீட்டனர்.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்