நண்பரை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

நண்பரை அடித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2019-10-15 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கீழசெய்த்தலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் வீரமணி (வயது 32). இவர் கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு லாரிசெட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் இரவில் அந்த பகுதியில் உள்ள லாரிசெட் மற்றும் பஸ் நிறுத்தங்களில் படுத்து தூங்கி வந்தார்.

இவருடைய நண்பர் தாளமுத்துநகர் 3-வது தெருவை சேர்ந்த மனோகரன் மகன் முத்துக்குமார் (43). இவர் அந்த பகுதியில் உள்ள மற்றொரு லாரிசெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 24-7-2016 அன்று இரவு வீரமணி, முத்துக்குமார் ஆகியோர் மது குடித்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அங்குள்ள லாரிசெட்டுக்கு சென்று, அங்கிருந்த சுத்தியலை எடுத்து வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் படுத்து இருந்த வீரமணியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரே‌‌ஷ் விசுவநாத் குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆண்ட்ரூ மணி ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்