புதுவை அருகே நடுக்கடலில் ஆயுதங்களுடன் மோதல்: மீனவ கிராமங்களில் 2-வது நாளாக பதற்றம்

புதுவை அருகே நடுக்கடலில் மீனவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதையொட்டி போலீஸ் தடை உத்தரவால் ஆட்கள் நடமாட்டமின்றி மீனவ கிராமங்கள் வெறிச்சோடின. 2-வது நாளாக நேற்றும் அங்கு பதற்றம் நீடித்தது.

Update: 2019-10-15 23:00 GMT
அரியாங்குப்பம்,

புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம், தமிழக பகுதியான நல்லவாடு ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கிடையே சுருக்கு வலை போட்டு மீன்பிடிப்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் இதேபோல் தகராறு ஏற்பட்டதையொட்டி மீனவ பஞ்சாயத்தார் கூடி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு படகுகளில் வந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி வாக்குவாதம் செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதுபற்றி தாக்கப்பட்ட மீனவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் நல்லவாடு கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் அரிவாள், சுளுக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் படகுகளில் திரண்டு வந்தனர். வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களும் ஆயுதங்களுடன் வந்தனர். நடுக்கடலில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

இதில் இருதரப்பை சேர்ந்த படகுகளும் சேதமடைந்தன. கடற்கரையிலும் ஏராளமானோர் ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபடுவதற்காக தயார் நிலையில் இருந்தனர். இதனால் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட மீனவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்களையும் மீறி தாக்குதலில் ஈடுபடுவதிலேயே மீனவர்கள் குறியாக இருந்தனர்.

இதனால் வேறுவழியின்றி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதைத்தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீராம்பட்டினத்தை சேர்ந்த சுகுமாறன் (37) என்பவர் படுகாயமடைந்தார். மோதலில் வீராம்பட்டினம் பிரபு, சுரேந்தர் (21), நல்லவாடு அய்யனாரப்பன், மஞ்சினி, ரவிச்சந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீனவர்கள் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக வீராம்பட்டினம் சுரேந்தர், நல்லவாடு அய்யனாரப்பன் ஆகியோர் தனித்தனியாக புகார் தெரிவித்ததன் பேரில் இரு தரப்பையும் சேர்ந்த 600 பேர் மீது கும்பலாக கூடுதல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மோதல் ஏற்படாமல் தடுக்க நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2 பேருக்கு மேல் கூடினால் கைது நடவடிக்கை பாயும் என்பதால் ஆள் நடமாட்டமின்றி இரு மீனவ கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் தொடர்ந்து 2-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. கைது நடவடிக்கைக்கு பயந்து ஆண்கள் தலைமறைவாகி விட்டனர். பெண்களும், சிறுவர்களும் மட்டும் உள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையொட்டி வீராம்பட்டினத்தில் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசாரும் தேர்தல் பணிக்கு வந்துள்ள துணை ராணுவத்தினரும் 3 பிரிவுகளாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நல்லவாடு கிராமத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் (தெற்கு) தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாரும், கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலும் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.

இதற்கிடையே மோதல் சம்பவம் மீண்டும் தொடராமல் இருக்க வீராம்பட்டினத்தில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.வும், நல்லவாடு கிராமத்தில் அனந்தராமன் எம்.எல்.ஏ.வும் மீனவ பஞ்சாயத்தார்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கினர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.

மீனவர்களிடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி கலெக்டர் அருண் தலைமையில் நகர பகுதியில் இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்