விற்பனைக்காக தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை

விற்பனைக்காக தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் சவுமியா சுந்தரி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2019-10-16 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓட்டல் உரிமையாளர்கள், உணவு விடுதி நடத்துவோர், பலகாரங்கள், தேனீர் கடைகள் நடத்துவோர், மளிகைக்கடைக்காரர்கள், வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் சவுமியா சுந்தரி பேசியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக திருமண மண்டபங்களில் பலகாரம் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் கட்டாயம் பதிவு செய்து, உணவுத்தரக்கட்டுப்பாடு உரிமம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்திடவேண்டும்.

விதிமுறைகள்

இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் நிறமிகளையும் பயன்படுத்தக்கூடாது. இந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது உணவுப்பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட கவுரவ தலைவர் அஸ்வின்ஸ் கணேசன், செயலாளர் உடையார் முத்துக்குமார், பொருளாளர் சிவக்குமார், நகர தலைவர் செல்லப்பிள்ளை, நளபாகம் முத்துவீரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில பொறுப்பாளர் சண்முகநாதன், மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன், அரும்பாவூர் குறிஞ்சி சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்