பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

Update: 2019-10-16 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு விடுதலை ஆகியவற்றின் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு, பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு விடுதலை மாவட்ட செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தண்டபாணி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவற்றால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. சந்தை பொருட்களின் தேக்கமும், ஆலை மூடப்படுவவதும் அடிக்கடி நடக்கிறது. சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து விட்டன. எனவே ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்திட வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.

விவசாய கடன்கள் தள்ளுபடி

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு கால நிவாரணம் வழங்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., ரெயில்வே, ராணுவ தளவாட தொழிற்சாலைகள், ஏர் இந்தியா போன்றவற்றை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணி நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். வயதானவர்கள் மற்றும் விதவைகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்