தொட்டியம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்

தொட்டியம் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-10-16 23:00 GMT
தொட்டியம்,

தொட்டியம் காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் மாட்டுவண்டியில் மணல் எடுக்க பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த மணல் குவாரி மூலம் தொட்டியம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கட்டுமான பணிகளுக்கு மாட்டுவண்டிகளில் மணல் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்ததால் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் மணல் குவாரியை திறக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்று கோரிக்கை வைத்தனர்.

மாட்டு வண்டி தொழிலாளர்கள்

அத்துடன் ஆற்றுக்குள் மாட்டுவண்டிகள் சென்று வர பாதை அமைத்தனர். ஆனால் அதிகாரிகள் மணல் எடுக்க இன்னும் உத்தரவு வரவில்லை என்று காலதாமதம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று காலை தங்களது மாட்டுவண்டிகளுடன் காவிரி ஆற்றுக்கு மணல் எடுக்க வந்தனர். அங்கு பாதை அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு மணல் அள்ள அனுமதி கேட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரபீக், வருவாய் அதிகாரி சேகர், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது, இன்னும் ஒரு வாரத்திற்குள் குவாரி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்