பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2019-10-16 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் அந்தோணிராஜ் (வயது 29). கூலித் தொழிலாளி. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 14-3-13 அன்று அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் அந்தோணிராஜின் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அந்த பெண்ணை அந்தோணிராஜ் வீட்டுக்குள் இழுத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயன்றார். ஆனால் அந்த பெண் அங்கிருந்து தப்பி வெளியில் வந்து விட்டார். அப்போது அவருடைய கழுத்தில் கத்தி வெட்டியதால் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார்சரவணன் குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிராஜிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வி.சுபா‌ஷினி ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்