உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் 33 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் 33 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-10-16 22:15 GMT
சேலம்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதையொட்டி இன்ஸ்பெக்டர்கள் முதல் ஐ.ஜி. வரையிலான அதிகாரிகளை மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில் குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய கூடாது எனவும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி இருக்க கூடாது என்பதும் விதிமுறையாகும். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றத்திற்கான பட்டியலை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமி‌‌ஷனர்கள் தயாரித்து வருகின்றனர்.

33 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்

இந்தநிலையில் சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்டவை அடக்கிய மேற்கு மண்டலத்தில் ஒரே நாளில் 33 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இந்திரா, சுந்தராம்பாள், சரோஜா, சதீ‌‌ஷ், மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ராஜராஜன் ஆகியோர் கோவைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

இதேபோல் கோவை மாநகரில் இருந்து சிவக்குமார், முருகாஜலம், ஆனந்த், சங்கீதா, திருப்பூர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் நாகராஜ், நாமக்கல் ஜெயவேல் ஆகியோர் சேலம் மாநகருக்கு மாற்றப்பட்டு உள்ளனர் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்