மாநில அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை கர்நாடகத்தில் புதிதாக விவசாய கடன் தள்ளுபடி இல்லை - முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

மாநில அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை உள்ளது என்றும், அதனால் கர்நாடகத்தில் புதிதாக விவசாய கடன் ஏதும் தள்ளுபடி இல்லை என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Update: 2019-10-16 23:15 GMT
பெங்களூரு, 

இதுதொடர்பாக முதல்- மந்திரி எடியூரப்பா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வட கர்நாடகத்தில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ளது.

இதற்கு பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. அதனால் புதிதாக விவசாய கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் இல்லை. முந்தைய கூட்டணி அரசில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றவர்களுக்கு மட்டும் தள்ளுபடியின் பயன் கிடைக்கும்.

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அரசு குறைக்க முடிவு செய்துள்ளது. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால் அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

எங்கள் அரசுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. இருக்கும் நிதி ஆதாரத்திற்குள் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக அடித்தளம் அமைக்க ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

மோசமான நிலையில் உள்ள வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெள்ள நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் நிதி கிடைப்பதில் தொழில்நுட்ப ரீதியான தாமதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகள் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் தேவையின்றி குழப்பத்தை உருவாக்குகின்றன. நீர் பங்கீட்டு பிரச்சினையில் அண்டை மாநிலங்களுடன் பேசி சுமுக தீர்வு காணப்படும்.

நிலம், நீர், மொழி பிரச்சினையில் சமரசத்திற்கு இடம் இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

காலை 8.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மராட்டிய மாநிலத்திற்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். ஆனால் குறித்த நேரத்தில் ஹெலிகாப்டர் பெலகாவிக்கு வரவில்லை. இதனால் கோபம் அடைந்த எடியூரப்பா, மராட்டிய பிரசாரத்தில் உள்ள துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், ஒரு ஹெலிகாப்டரை கூட சரியான நேரத்திற்கு அனுப்ப முடியாதா? என்று கூறி கோபத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு பகல் 12 மணியளவில் ஹெலிகாப்டர் வந்தது. அதில் எடியூரப்பா பயணம் செய்து மராட்டிய மாநிலத்திற்கு சென்றார்.

மேலும் செய்திகள்