கடலூர், வனவிலங்குகளுக்கு உணவு கொடுத்தால் நடவடிக்கை - வனத்துறையினர் எச்சரிக்கை

வனவிலங்குகளுக்கு உணவு கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-17 22:30 GMT
சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அருகே கிருஷ்ணாபுரத்தில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காடு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூரில் தொடங்கி கடலூர் மாவட்டம் வேப்பூர், பெரியநெசலூர், அடரி உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக கடலூர்–சேலம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி நயினார்பாளையம் வரை சுமார் 55 கிலோ மீட்டர் சுற்றளவில் படர்ந்து விரிந்து காணப்படுகிறது. இந்த காப்புக்காட்டில் மான், குரங்கு, முயல், நரி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக காப்புக்காட்டில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

 உணவு மற்றும் குடிநீருக்காக விலங்குகள் அடிக்கடி காட்டைவிட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகிறது. அவ்வாறு வரும் குரங்கு, முயல் உள்ளிட்ட விலங்குகளுக்கு சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பழம், உணவு மற்றும் காய்கறிகளை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காப்புக்காட்டில் உள்ள சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் வனத்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.

அதில் வனவிலங்குகளுக்கு வாகன ஓட்டிகள் யாரேனும் உணவுகள் கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காப்புக்காட்டில் இருந்து வெளியே வந்து சாலையோரங்களில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு பொதுமக்கள் உணவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை கொடுத்து வருகின்றனர்.

 இதை சாப்பிடும் விலங்குகள் மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் வாகன ஓட்டிகள் கொடுக்கும் உணவுக்காக சாலையோரங்களிலேயே சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் போது, சில நேரங்களில் விலங்குகள் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறது. இதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்