உடயவர்தீயனூரில் மதுபானக்கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி உடயவர்தீயனூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-10-17 23:00 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை அடுத்த பெருமாள்தீயனூர்- உடயவர்தீயனூர் சாலையின் இடைபட்ட பகுதியில் மதுபானக்கடை (டாஸ்மாக்) உள்ளது. இந்த சாலையின் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், முதியவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதுபானக்கடையில் மதுவாங்கி குடிக்கும் மது பிரியர்கள் போதை தலைக்கேறியதும் அப்பகுதியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். மேலும் அரை நிர்வாணத்துடன் நின்றுகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

இதனால் பெண்கள் அந்த வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பெருமாள்தீயனூர், செங்குழி, மலைமேடு, உடயவர்தீயனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணி அளவில் உடயவர்தீயனூரில் ஒன்று திரண்டு அரியலூர்- விக்கிரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் கலைவாணன், டாஸ்மாக் மேலாளர் ராமசந்திரன், கலால் தாசில்தார் திருமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், உடயவர்தீயனூர் சாலையில் உள்ள மதுபானக்கடை விரைவில் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அரியலூர்- விக்கிரமங்கலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்