மாமனாரின் சிகிச்சைக்காக பரோல்கேட்டு நளினி மீண்டும் மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தனது மாமனாரின் சிகிச்சைக்காக மீண்டும் ஒருமாதம் பரோல்கேட்டு மனுகொடுத்துள்ளார்.

Update: 2019-10-17 23:15 GMT
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் லண்டனில் டாக்டராக உள்ளார்.

அவருக்கு திருமண ஏற்பாடு செய்ய நளினி பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் அவருக்கு 51 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது. அப்போது அவர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த காலத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்படாததால் பரோல்காலத்தை நீட்டிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு பரோல் நீட்டிக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் தேதி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் ஒருமாதம் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் மனு கொடுத்துள்ளார். அதில் இலங்கையில் உள்ள தனது கணவர் முருகனின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அவர் சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறார். சிகிச்சை காலத்தில் அவருக்கு உதவியாக இருக்க ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்