கவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊது குழலாக செயல்படுகிறார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

Update: 2019-10-17 23:45 GMT
புதுச்சேரி, 

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். சாரம் தென்றல் நகர், ரெயின்போநகர், கிருஷ்ணாநகர், சாமிப்பிள்ளைதோட்டம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்று பேசினார். அவருக்கு ஆங்காங்கே மலர்தூவி வரவேற்பு அளித்தனர். மாலை 6.15 மணிக்கு பிரசாரம் தொடங்கிய மு.க.ஸ்டாலின் இரவு 8.10 மணிக்கு தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

புதுவை மக்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி. இன்னொரு நன்றியும் நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுவையில் போட்டியிட்ட வைத்திலிங்கத்தை வெற்றிபெற வைத்தீர்கள். அதற்கு நன்றி சொல்வது எனது கடமை. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நாம் போட்டியிட்டோம். அதில் 39 தொகுதியில் வெற்றிபெற்றோம். இந்திய அளவில் 3-வது இடத்தில் நாம் உள்ளோம்.

அத்தகைய சாதனைபடைக்க ஆதரவு தந்தீர்கள். அதற்கு கருணாநிதியின் மகனாக நன்றி தெரிவிக்கிறேன். அதேநேரத்தில் இப்போது உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அது என்ன என்பது உங்களுக்கே தெரியும். வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் நமது வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவினை தந்து சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும்.

இந்த தேர்தல் ஏன் வந்தது? என்பது உங்களுக்கு தெரியும். ஜான்குமார் ஏற்கனவே நெல்லித்தோப்பில் எம்.எல்.ஏ. ஆனவர். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. முதல்- அமைச்சராக பதவியேற்ற நாராயணசாமி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் அவர்தான் கைகொடுத்தார். இப்போது அவரே ‘கை’ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நேரடியாக பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிறது. புதுவையில் நேரடியாக நடக்காவிட்டாலும் கவர்னர் மூலம் மறைமுகமாக நடக்கிறது. இதைத்தான் அப்போதே அண்ணா சட்டமன்றத்தில் பதிவு செய்தார். அதாவது ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டிற்கு கவர்னர் எதற்கு? என்றார். அதாவது ஆட்டுக்கு தாடியும், நாட்டிற்கு கவர்னரும் வேஸ்ட். இந்த மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்ய முதல்-அமைச்சர் எத்தனையோ திட்டங்களை அறிவிக்கிறார். அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். ஆனால் கவர்னர் கிரண்பெடி அதற்கு தடைக்கல்லாக தடுத்து நிறுத்தும் அயோக்கியத்தனத்தில் ஈடுபடுகிறார்.

அதற்கு எடுத்துக்காட்டாக இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கூறலாம். அது வழங்கப்படாமல் இருப்பதற்கு கவர்னர்தான் காரணம். அப்படிப்பட்ட நிலையில் பாரதீய ஜனதா ஆதரவோடு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு பச்சை துரோகி. இதை நான் சொல்லவில்லை. மறைந்த ஜெயலலிதாதான் அப்படி கூறினார்.

2011 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றிபெற்ற நிலையில் ரங்கசாமி அ.தி.மு.க.வை கழற்றிவிட்டுவிட்டு ஆட்சியை அமைத்தார். அப்போதுதான் ஜெயலலிதா அந்த வார்த்தையை கூறினார். மேலும் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார். அவர் நம்பிக்கை துரோகி. துரோகம் செய்வது அவருக்கு கைவந்த கலை. புதுவை மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று ஜெயலலிதா கூறினார். என்.ஆர்.காங்கிரசுக்கு வாக்களிப்பது தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் பேசினார். இதை ஒவ்வொரு அ.தி.மு.க.வினரும் கவனிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் கூறினேன். இதை அ.தி.மு.க. தொண்டர்கள் உணர்ந்து பார்க்கவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு பிடிக்காதது பாரதீய ஜனதா. அந்த கட்சியோடு ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன் என்றார். ரங்கசாமியை பச்சை துரோகி என்றார். ஆனால் அவர்கள் இப்போது கூட்டணி வைத்து உள்ளனர். அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். முதல்-அமைச்சர் நாராயணசாமி எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்தாலும் அதை தடுக்கும் வேலைகளில் கவர்னர் பாரதீய ஜனதாவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்.

புதுச்சேரி மாநில அந்தஸ்தை பெற திட்டங்களை நாராயணசாமி உருவாக்குகிறார். ஆனால் அதை கவர்னர் தடுத்து நிறுத்துகிறார். புதுவையின் ஒரு பகுதியான ஏனாமை ஆந்திர மாநிலத்துக்கு தாரை வார்க்க கவர்னர் முயற்சி செய்கிறார். இது பச்சை துரோகம். மாநிலத்துக்கு துரோகம் செய்பவர்கள் கவர்னருக்கு ஆதரவாக உள்ளனர். நாம் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.

உங்களுக்கு ஒரு நல்ல முதல்-அமைச்சர் கிடைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் எங்களது போதாத காலம் எடுபிடி முதல்-அமைச்சர் கிடைத்துள்ளார். அவர் விபத்தில் வந்தவர் என்று நான் கூறினால் அவருக்கு கோபம் வருகிறது. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்கிறார். ஜெயலலிதா மறைந்ததால் அவர் முதல்-அமைச்சர் ஆனார். அதுவும் முதலில் ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்-அமைச்சர் ஆனார். அவரது போதாத காலம் சட்டசபையில் என்னை பார்த்து சிரித்துவிட்டார். அதனால் அவரது பதவி போனது.

அதனைத்தொடர்ந்து சசிகலா முதல்-அமைச்சர் ஆக தேதி குறித்தார்கள். அவர் பதவியேற்க இருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வந்தது. அவருக்கு 4 வருடம் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் சசிகலா இடிந்துபோனார். அந்த சமயத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்று சக தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது காலில் கீழே ஏதோ ஊர்ந்துபோய் உள்ளது. கீழே பார்த்தால் எடப்பாடி பழனிசாமி மண்புழுபோல் நெளிந்து நெளிந்து வந்துள்ளார்.

இதை நான் சொன்னால் எடப்பாடி பழனிசாமி நான் விவசாயி என்கிறார். மண்புழு என்றால் வயலில் இருக்கவேண்டும். சசிகலாவின் காலில் விழுவதா மண்புழு? கோவையில் பேனர் வைத்ததால் விபத்து ஏற்பட்டு ரகு என்ற வாலிபர் உயிரிழந்தார். அதற்கு அ.தி.மு.க.வினர் கவலைப்படவில்லை. 10 பேனருக்கு அனுமதி வாங்கிவிட்டு 400 இடங்களில் பேனர் வைத்தனர்.

சமீபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததால் நிலைதடுமாறி விழுந்த அவர் மீது லாரி ஏறி செத்தார். அதற்கு நாம் வீட்டிற்கு சென்று அனுதாபம் தெரிவித்தோம். ஆனால் ஆளுங்கட்சியினர் ஒருவராவது ஆறுதல் கூறினார்களா? புதுவை முதல்-அமைச்சரும் அனுதாபம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் புதுவையில் பேனர் வைக்கக் கூடாது என்று உத்தரவும் போட்டார்.

ஆனால் தமிழகத்தில் சீன அதிபர், இந்திய பிரதமர் வருகைக்கு பேனர் வைக்க கோர்ட்டில் அனுமதி கேட்கும் வெட்கப்பட வேண்டிய நிலையில் அரசு உள்ளது. ஒரு முதல்-அமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் எடப்பாடி பழனிசாமி. எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் நாராயணசாமி. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் காலத்தில்தான் அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி அல்ல. அது எடுபிடி ஆட்சி. மத்திய அரசு சொல்வதை கேட்கக்கூடிய ஆட்சி. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை கேள்வி கேட்காத ஆட்சி. தட்டிக்கேட்கும் திராணி தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஆனால் கவர்னரின் செயல்பாடுகளை புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்கிறார். அவருக்கு கெத்து இருக்கிறது. ஜனநாயகத்தை காக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார்.

தமிழகத்தில் பதவிக்காக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். எதிர்த்தால் பதவிபோய்விடும் என்பதால் அடிமைப்பட்டு கிடைக்கிறார்கள். மேலும் அவர்களது முறைகேடுகள் எல்லாம் சி.பி.ஐ.யின் பிடியில் உள்ளது. பதவி போனால் அடுத்த நிமிடம் ஜெயிலில் இருப்பார்கள்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை நிதி ஆயோக் கணக்கின்படி சட்டம் ஒழுங்கு, தொழில் தொடங்குவது, பொருளாதார குறியீடுகளில் புதுச்சேரி மாநிலம் 5-வது இடத்தில் உள்ளது. சுகாதாரத்துறையில் முதல் இடத்தில் உள்ளது. இதுதொடரவேண்டும். மக்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். இதற்காக கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்