குன்றத்தூர் அருகே ஜாமீனில் வந்தவரை கொன்ற வழக்கில் 5 பேர் கைது

குன்றத்தூர் அருகே ஜாமீனில் வந்தவரை கொன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-18 23:30 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த கெலட்டிபேட்டை, நாகரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாபு என்ற போகபதி பாபு(வயது 42). இவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கிரிராஜன் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் நந்தம்பாக்கம், பாரதியார் நகர் மெயின் ரோடு வழியாக பாபு சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பாபு ஹெல்மெட்டுடன் ஓடி வருவதும், அவரை கொலை செய்து விட்டு 2 பேர் ரத்தம் படிந்த கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மோகன்(28), கிருஷ்ணன்(30), கோடீஸ்வரன், மணிமாறன், அஜய் என்ற மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பாபுவின் மகளை, கிரிராஜனின் உறவினர் மோகன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு கிரிராஜனை பாபு வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்த பாபுவை, கிரிராஜன் கொலைக்கு பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்ட தேடி வந்தனர். நேற்று முன்தினம் நந்தம்பாக்கம் பகுதிக்கு பாபு வருவதை அறிந்துகொண்ட மோகன் தரப்பினர் பாபுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறிமுதல் செய்து மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்