மசினகுடி அருகே, 108 ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து

மசினகுடி அருகே 108 ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2019-10-18 22:00 GMT
மசினகுடி, 

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள கல்லட்டியில் இருந்து ஊட்டிக்கு நோயாளியை சிகிச்சைக்கு அழைத்து சென்ற 108 ஆம்புலன்ஸ் மீண்டும் கல்லட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது திடீரென 108 ஆம்புலன்சில் பிரேக் பிடிக்காததால் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் சேதமடைந்ததோடு, ஆம்புலன்சின் முன்பகுதி நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர் என 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தினால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது:- நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ வசதி குறைவாக உள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் இயங்கி வரும் 108 ஆம்புலன்சுகளை முறையாக பராமரிக்காததால் அடிக்கடி பழுதாகி வருகின்றன. நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்சுகள் நடுகாட்டில் பழுதாகி நிற்பது, டயர் பஞ்சராவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு சம்பந்தபட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். கடந்த சில தினங்களுக்கு முன்பு முன் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் 2 நாட்கள் நடுவழியிலேயே 108 ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. அதே வாகனம் தற்போது பிரேக் பிடிக்காமல் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. எனவே 108 ஆம்புலன்சுகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்