மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சாலையில் வாகனங்கள் செல்ல தடை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நடவடிக்கை

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Update: 2019-10-18 23:00 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் மேற்குராஜ வீதி என அழைக்கப்படும் அர்ச்சுனன் தபசு சாலையில் வெண்ணை உருண்டை கல், அர்ச்சுனன் தபசு குடைவரை சிற்பம், கிருஷ்ண மண்டபம், கணேச ரதம், பஞ்சபாண்டவர் மண்டபம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் உள்ள பகுதியாக விளங்குகிறது.

தற்போது சுற்றுலா வாகனங்கள் அதிகம் வருவதால் இந்த சாலையில் வாகன நிறுத்தும் இடம் இல்லாததால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களும் சாலை ஒரத்திலேயே நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கிடையில் வாகனங்களில் இருந்து வரும் புகையாலும் சிற்பங்களில் மாசு ஏற்படுகிறது.

இதையடுத்து வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், சிற்பங்களை மாசடையாமல் பாதுகாக்கவும் தொல்லியல் துறையின் பரிந்துரையின்பேரில் நேற்றுமுதல் அர்ச்சுனன் தபசு சாலையில் மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், உத்தரவின்பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த சாலையில் வாகனங்கள் செல்லாத வகையில் பஜனை கோவில் சந்திப்பிலும், தலசயன பெருமாள் கோவில் சந்திப்பிலும் சாலையின் குறுக்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இனி தலசயன பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனங்ளை நிறுத்திவிட்டு, பயணிகள் நடைபயணமாக சென்றே அர்ச்சுனன் தபசு வளாகத்தில் உள்ள புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியும். சில நாட்களுக்கு முன் இந்த பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்