ராஜாக்கமங்கலம் அருகே துணிகரம், வீட்டில் ஜன்னல் ஓரம் இருந்த பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு - மர்மநபருக்கு வலைவீச்சு

ராஜாக்கமங்கலம் அருகே வீட்டு ஜன்னல் ஓரம் இருந்த பெண்ணிடம் 15 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-10-18 22:15 GMT
ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஈத்தாமொழியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி நிஷா (வயது 36). கணவன்-மனைவி இருவரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நிஷாவுடன் அவருடைய தாயார் விமலா குமாரியும் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நிஷா கதவை பூட்டினார். பின்னர், ஜன்னல் ஓரம் இருந்த சோபாவில் அமர்ந்து தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அதே அறையில் அவரது தாயாரும் இ்ருந்தார்.

அப்போது, திடீரென ஒரு மர்ம நபர் ஜன்னல் வழியாக கையை விட்டு நிஷா அணிந்திருந்த 15½ பவுன் நகையை பறிக்க முயன்றார். இதனால், அதிர்ச்சி அடைந்த நிஷா, நகையை பிடித்துக் கொண்டு கொள்ளையனிடம் போராடினார். இதனை கவனித்த விமலா குமாரியும் அங்கு ஓடி வந்தார். எனினும் நகை மர்மநபரின் கையில் சிக்கியது. நகையின் டாலர் மட்டும் நிஷாவிடம் இருந்தது.

15 பவுன் நகையுடன் மர்மநபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், இதுகுறித்து நிஷாவின் தாயார் விமலாகுமாரி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பல நாட்களாக நிஷாவின் வீட்டை மர்ம நபர் நோட்டமிட்டதும், நகையை பறித்து விட்டு வெளியே தயாராக நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. எனவே, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் உள்ளூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வங்கி அதிகாரி மனைவியிடம் ஜன்னல் வழியாக 15 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்