பெற்றோருக்கு உதவி தொகை வழங்க மறுக்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை - கலெக்டர் பேச்சு

பெற்றோருக்கு உதவி தொகை வழங்க மறுக்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என முதியோர் தின விழாவில் நாகை கலெக்டர் பிரவீன் நாயர் கூறினார்.

Update: 2019-10-19 23:00 GMT
நாகப்பட்டினம், 

நாகை அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் சமூகநலத்துறையின் சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட சமூகநல அலுவலர் உமையாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவு இன்றி வாழ்ந்து வரும் முதியோர்களுக்காக முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

முதியோர் இல்லங்களில் தங்கும் இடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு சாதனங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. பெற்றோரை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையிலும், சொத்துக்கள் எதுவும் இல்லாத போது உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையெனில் சட்டப்படி மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடம் இருந்து பராமரிப்புத்தொகை கோரலாம். பராமரிப்பு உதவி கோருபவர்கள் மாவட்ட சமூக நல அலுவலர்களுக்கு தங்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம்.

பெற்றோர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்க மறுக்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் முதியவர்களுக்கு துண்டு அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து முதியவர்கள் பங்கேற்ற மாறுவேடபோட்டிகள், ஆடல், பாடல், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்