நாகூர் அருகே, நூதன முறையில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

நாகூர் அருகே நூதன முறையில் சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.

Update: 2019-10-19 22:30 GMT
நாகூர்,

நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 பேரிடம் இருந்த டிரம்சில்(இசை கருவி) சோதனை செய்த போது அதில் சாராயம் பாட்டில்கள் இருந்தது.

இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி எழுஸ்வரன் ஆதிதிராவிட தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் சத்தியமூர்த்தி (வயது 21), நேதாஜி நகர்ரை சேர்ந்த முத்தையா மகன் பிரபாகரன் (25) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து டிரம்சில் மறைத்து சாராய பாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 100 சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்