திருவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் மீண்டும் கைது

திருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரும் பிடிபட்டார்.

Update: 2019-10-19 22:45 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்காலில் உள்ள பொன்னுசாமி நகரில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி டாக்டர் ஆனந்தி என்பவரை கடந்த ஆண்டு திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய கணவரும், ஆட்டோ டிரைவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான ஆனந்தியிடம் விசாரணை நடத்தியதில், 1,000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தி வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆனந்தியை போலீசார் மற்றும் சுகாதார துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஆனந்தி மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சுகந்தி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரில், ஆனந்தி மருத்துவத்திற்கான கல்வி தகுதியின்றி சட்ட விரோதமாகவும், பெண்களுக்கு கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிய ஸ்கேன் எந்திரத்தை பயன்படுத்தியும், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் நோக்கத்துடன் அலோபதி மருத்துவம் செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து நேற்று முன்தினம் ஆனந்தியை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மீண்டும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது உறுதியானது. மேலும் அவருக்கு திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன்குமார் (20) என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ஆனந்தி, நவீன்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்