ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது வழக்கு? - போலீஸ் டி.ஜி.பி.க்கு, கவர்னர் உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் டி.ஜி.பி.க்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-10-20 23:30 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. நலத்திட்ட உதவிகள் வழங்க கவர்னர் தடையாக இருக்கிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியும் அரசு விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை என்று கவர்னர் கிரண்பெடியும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, ‘கவர்னர் கிரண்பெடி தேர்தல் விதிகளை மீறி செயல்படுகிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது ஏனாமில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் மீது தேர்தல் கமிஷனில் புகார் செய்வேன். மேலும் சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்’ என்றார்.

இதற்கிடையே காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர்.

அப்போது ஸ்கூட்டரில் சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட யாரும் ஹெல்மெட் அணியவில்லை. இது தொடர்பான படம் பத்திரிகைகளில் வந்தது. அந்த படத்துடன் கவர்னர் கிரண்பெடி தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘மோட்டார் வாகன சட்டத்தை மீறும் இச்செயல் வெட்கக்கேடானது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகள், சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. புதுவை போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் சட்டத்தின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்றது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவர்னர் கிரண்பெடியின் இந்த பதிவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில், ‘ஒரு கருத்தை கூறுவதற்கு முன் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்