திருப்பூர் எஸ்.ஆர். நகர் வடக்கு குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா சேவை; கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பூர் எஸ்.ஆர். நகர் வடக்கு குடியிருப்பு பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா சேவையை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-10-22 22:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 60-வது வார்டுக்கு உட்பட்ட மங்கலம் ரோடு எஸ்.ஆர்.நகர் வடக்கு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் 5 வீதிகளில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 35 இ்டங்களில் கண்காணிப்பு கேமராக்களை எஸ்.ஆர்.நகர் நண்பர்கள் குழுவினர் சார்பில் பொருத்தியுள்ளனர். இதற்கான கட்டுப்பாட்டு அறை அங்குள்ள சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்களின் சேவை தொடக்க விழா நேற்று காலை எஸ்.ஆர். நகர் வடக்கு சிறுவர் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார். அ.தி.மு.க. மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி முன்னிலை வகித்தார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு) ஆகியோர் கலந்து கொண்டு அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர். மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், அப்பகுதியில் உள்ள குடியிருப்போருக்கு குப்பை சேகரிக்கும் உபகரணங்களை வழங்கினார்.

திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் நவீன்குமார், மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், முன்னாள் கவுன்சிலர் கருவம்பாளையம் மணி, வனத்துக்குள் திருப்பூர் சிவராமன், எஸ்.ஆர்.நகர் நண்பர்கள் குழு நிர்வாகிகள் மோகனமுரளி, நாராயணன், தனபால், பழனி, கேசவன், முத்து, மகேஷ், சிவசங்கரன் மற்றும் அப்பகுதி குடியிருப்போர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்