டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது

டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த ரூ.35ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-10-22 23:45 GMT
மதுரை,

மதுரை மாவட்ட கலால் துறையில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து(வயது 44). இவர் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் ஓட்டல்கள், கிளப்புகளில் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலனுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சத்தீயசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பரமகுரு உள்ளிட்டோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் மாரிமுத்துவை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை, மாரிமுத்து கருப்பாயூரணி அருகே உள்ள சீமான்நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அப்போது அவரிடம் ரூ.35 ஆயிரம் இருந்தது. இந்த பணத்திற்குரிய எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் மதுரை மாவட்ட கலால் துறையில் உதவி கமிஷனராக பணியில் சேர்ந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே லஞ்சம் வாங்கியது தொடர்பாக பல புகார்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்