சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்த தம்பதி கைது

கோவையில் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

Update: 2019-10-23 23:15 GMT
கோவை,

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 49). இவருடைய மனைவி மகேஸ்வரி (43). இவர்கள் இருவரும் அதேப்பகுதியில் தனவர்ஷா டிராவல்ஸ் என்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனம் மூலம் சீரடி, கோவா, மும்பை, மணாலி, அந்தமான் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும், துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்தனர்.

அதன்படி கோவையை சேர்ந்த ஏராளமானோர் இங்கு பணம் செலுத்தினர். கோவை ஹோப்காலேஜ் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி முத்துக்குமாரசாமி தனது குடும்பத்துடன் அந்தமான் செல்ல ரூ.3½ லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு கடந்த மாதம் 21-ந் தேதி நேரில் சென்று பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி அவர் அந்த நிறுவனத்துக்கு சென்று பார்த்தபோது அது பூட்டி இருந்தது. உடனே சுரேஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு முத்துக்குமாரசாமி தொடர்பு கொண்டார். அப்போது அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து அந்த நிறுவனம் குறித்து விசாரித்தபோதுதான் சுரேஷ்குமார், மகேஸ்வரி ஆகியோர் சேர்ந்து ஏராளமானோரிடம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்துகுமாரசாமி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணிடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து சுரேஷ்குமார், மகேஸ்வரி மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏராளமானோரிடம் ரூ.6 கோடிக்கும் மேல் பணத்தை வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. எனவே அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையை சேர்ந்த போலீசார் தலைமறைவான தம்பதியை தீவிரமாக தேடி வந்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் தங்களின் இடத்தை அடிக்கடி மாற்றி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வீட்டில் பதுங்கி இருந்த சுரேஷ்குமார், மகேஸ்வரியை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோவை 7-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர்கள் எத்தனை பேரிடம் மோசடி செய்து உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. எனவே மோசடி செய்த தம்பதியை காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு தகவலும் தெரியவரும் என்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் செய்திகள்