சத்துணவு முட்டைகளை சரிபார்த்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் - கலெக்டர் அறிவுரை

சத்துணவு முட்டைகளை சரிபார்த்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று, சத்துணவு திட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசினார்.

Update: 2019-10-23 22:30 GMT
திண்டுக்கல், 

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்ட பணிகள் கண்காணிப்புக்குழு ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சத்துணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டம் முழுவதும் 1,520 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இவை மூலம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 870 மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மழைக்காலமாக இருப்பதால், சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்க வேண்டும். பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

சத்துணவு மையங்களில் 45 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். சத்துணவு முட்டை ஒவ்வொன்றும் 45 கிராம் முதல் 52 கிராம் வரை எடை இருக்க வேண்டும். முட்டைகள் அக்மார்க் தரத்திலான ஏ ரக முட்டைகளா என்பதை சரிபார்த்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் விவரத்தை தினமும் குறுந்தகவலாக கட்டாயம் அனுப்ப வேண்டும்.

புதிய வகுப்பறையுடன் கூடிய சத்துணவு சமையலறை கட்டிடம் கட்டுதல், சமையல் தோட்டம் அமைத்தல், கியாஸ் அடுப்பு பழுதுநீக்கம் தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும். சத்துணவு மையங்களை மாதந்தோறும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சதீஷ்பாபு மற்றும் மாவட்ட அளவிலான சத்துணவு திட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்