அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் தவிப்பு

ராமநாதபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2019-10-23 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் அங்கீகாரத்தை புதுப்பிக்க அரசின் 14 துறைகளில் சான்றிதழ்கள் பெற்று பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பல பள்ளி நிர்வாகத்தினர் இவ்வாறு சான்றிதழ்களை பெற்று மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

பல அரசு உதவி பெறும் பள்ளிகளில் சான்றிதழ்கள் சரிவர சமர்ப்பிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அரசின் சார்பில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நேரத்தில் இவ்வாறு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பண்டிகையை கொண்டாட முடியாமல் ஆசிரியர்கள் பரிதவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத நிலையில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்கக்கூடாது என்று அரசாணை இருந்தும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்