விருப்பாட்சிபுரத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வேலூர் விருப்பாட்சிபுரத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-10-23 22:15 GMT
வேலுர், 

வேலூர் விருப்பாட்சிபுரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்பாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிக்கு குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. அதன்காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நேரில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை 9 மணியளவில் விருப்பாட்சிபுரம் பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தொடர்ந்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் வேலூர்-ஆரணி சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்