கவர்னரா? முதல்-அமைச்சரா? யாருடைய உத்தரவினை பின்பற்றுவது? போலீசார் குழப்பம்

புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோரில் யார் உத்தரவினை பின்பற்றுவது? என்பது தொடர்பாக போலீசாரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-10-23 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையேயான மோதல் தொடர்கதையாகி உள்ளது. இருவரும் யார் தப்பு செய்கிறார்கள்? என்பதை உன்னிப்பாக கவனித்து அதை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காமராஜ் நகர் இடைத்தேர்தலில் கடைசி நாள் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர்களை ஓட்டிச் சென்றனர்.

இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்று கவர்னர் கிரண்பெடி விமர்சித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டார். முதல்-அமைச்சர் தனது தவறுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதற்கிடையே மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன், கவர்னர் கிரண்பெடி மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் படம் பத்திரிகைகளில் வெளியானதை போலீஸ் டி.ஜி.பி.யிடம் வழங்கி அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். இதுதொடர்பான படத்தையும் முதல்-அமைச்சர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விமர்சித்தார்.

இவர்களது மோதல் இப்போது புதுவை காவல்துறையில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் உத்தரவுப்படி ஊர்வலத்தில் வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் நோட்டீசு அனுப்பி வருகின்றனர். அதை முன்னணி தலைவர்கள் வாங்க மறுக்கின்றனர். சட்டப்படி சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

அதேபோல் முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்தித்த காவல்துறை உயர் அதிகாரிகள் கவர்னர் கிரண்பெடியின் உத்தரவினை சுட்டிக்காட்டி உள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட அந்த முக்கிய பிரமுகர்கள், நாங்கள் அபராதம் செலுத்த தயாராக உள்ளோம். முதலில் தவறு செய்த கவர்னர் மீது நடவடிக்கை எடுங்கள். அதன்பின் எங்களிடம் வாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் யார் மீது நடவடிக்கை எடுப்பது? யாருக்கு நோட்டீசு அனுப்புவது? என்று போலீசார் திணறி வருகின்றனர்.

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் முருகன் போலீஸ் டி.ஜி.பி.யிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் பிரசாரத்தில் முகத்தை ஹெல்மெட் போன்றவற்றை கொண்டு மறைப்பது என்பது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது. நாங்கள் 2 சக்கர வாகனத்தை 10 கி.மீ. வேகத்துக்கும் குறைவாகத்தான் ஓட்டி சென்றோம். இதற்காக அபராதம் விதித்தால் சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

அதேபோல் ஹெல்மெட் அணியாமல் மொபட்டில் சென்றதாக கவர்னர் கிரண்பெடி, பாரதீய ஜனதா தலைவர்கள் குறித்து ஊடகங்களில் படங்கள் வந்துள்ளது. அதன்மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும். கவர்னர் கிரண்பெடி பாகுபாடான அணுகுமுறையுடன் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

கவர்னர், முதல்-அமைச்சர் இடையே ஏற்பட்டுள்ள ஹெல்மெட் பிரச்சினை பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஹெல்மெட் கட்டாயம் சட்டத்தை அமல்படுத்தியபோது புதுவை மக்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டினர். சுமார் 40 ஆயிரம் பேருக்கு நோட்டீசு வழங்கியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

பொதுமக்களிடையே பெருமளவு அதிருப்தியை ஏற்படுத்திய இந்த கட்டாய ஹெல்மெட் திட்டத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னர் அமல்படுத்துவது என்று அரசே பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்