நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி தொடங்கியது

நாகர்கோவிலில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான 2 நாள் தடகள போட்டி நேற்று தொடங்கியது.

Update: 2019-10-24 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான 2 நாள் தடகள போட்டிகள் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ராமச்சந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், புனித மிக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எலைசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகள் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வயதுக்கு உட்பட்டவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் போன்ற தடகள போட்டிகள் நடந்தது.

மாநில போட்டி

இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றதால் அண்ணா விளையாட்டு அரங்கம் பரபரப்புடன் காட்சி அளித்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாள் தடகள போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பெறுபவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்றும், 2 நாட்கள் போட்டியில் 1,400 மாணவ- மாணவிகள் பங்கேற்பார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்