பர்கூரில் ரூ.4 கோடியில் 780 பேருக்கு தாலிக்கு தங்கம்

பர்கூரில் ரூ.4 கோடியில் 780 பேருக்கு தாலிக்கு தங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

Update: 2019-10-24 23:00 GMT
பர்கூர்,

பர்கூர், காவேரிப்பட்டணம், மத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த 780 பயனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பர்கூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பேசியதாவது:- பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக திருமண நிதியுதவிகள் இருவிதமாக வழங்கப்படுகிறது.

நலத்திட்டம்

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் மனுக்கள் மூலம் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைவில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நலத்திட்டம் வழங்கப்பட உள்ளது. எனவே, இது போன்ற திட்டங்களை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து 780 பேருக்கு ரூ.4.69 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பெருமாள், பர்கூர் தாசில்தார் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பையாஸ் அகமது, கூட்டுறவு சங்க தலைவர்கள் வெற்றிச்செல்வன், வெங்கடாஜலபதி, சமூக நல விரிவாக்க அலுவலர்கள் லலிதா, முனியம்மாள், ஜெயம்மா, லட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் சாமுவேல், வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்